நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இந்த துயரச் சம்பவம், இனி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி நிலவரங்களை தலைகீழாக மாற்ற போகிறது என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது.
இதுவரை இருந்த கூட்டணி கணக்குகள் எதுவுமே செல்லாது என்றும், கரூர் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் இனி அரசியல் காய் நகர்த்தல்கள் இருக்கும் என்றும் மூத்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய்யை இணைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக இருக்க, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவரும் தகவல்கள் என்டிஏ கூட்டணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
கரூர் துயச் சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மாறியுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் செய்வது, எவ்வளவு சவாலானது என்பதை அவர் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
தனித்துப் போட்டியிடுவது என்பது ஒரு பெரிய சவாலான முடிவு என்பதை உணர்ந்துள்ள விஜய், “திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” என்ற ஒற்றை இலக்கை நோக்கி நகர்ந்துள்ளார். இதை சாத்தியப்படுத்த, கூட்டணி அமைப்பதுதான் முதல் படி என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விஜய்யை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் நிலைப்பாட்டை கையாண்டன. இது, விஜய்யைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விஜய்யுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விஜய்யும் அதற்கு நெகிழ்வுத்தன்மையுடன் அணுகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக, விஜய்யின் நிலைப்பாடுகளைப் பகிரங்கமாக ஆதரித்து, ஆளும் கட்சியைச் சட்டமன்றத்திலும் வெளியிலும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால், என்டிஏ கூட்டணிக்குள் விஜய்யை இணைத்தால், அது 1991 தேர்தல் முடிவுகளை போல, பெரும் வெற்றியை உறுதி செய்யும் என்று என்டிஏ தலைவர்கள் கணக்கு போடுகின்றனர்.
என்டிஏ கூட்டணி விஜய்யை வளைக்க தீவிரமாக முயற்சிக்கும் இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான பிரியங்கா காந்தியும் விஜய்யுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி 2009ஆம் ஆண்டு முதலே விஜய்யுடன் நட்பு பாராட்டி வந்தாலும், தற்போது பிரியங்கா காந்தி இந்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியங்கா காந்திக்கு தமிழ்நாட்டை விட கேரள அரசியலில் விஜய்யை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள மலையாள ரசிகர்களிடையே விஜய்க்கு இருக்கும் அபாரமான செல்வாக்கை, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தினால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அது மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறதாம்.
தமிழ்நாட்டில் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், அங்கே குறைவான தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற முடியும். ஆனால், கேரளாவில் ஆட்சியை பிடிப்பதற்காக தமிழ்நாட்டில் சில தொகுதிகளை இழந்தாலும் பரவாயில்லை என்ற வித்தியாசமான கணக்கை பிரியங்கா காந்தி யோசிப்பதாக தகவல். இது, என்டிஏ கூட்டணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
விஜய் எந்த கூட்டணியில் இணைவது என்பதை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடனடியாக வெளியாக வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்தரப்பு எத்தகைய ‘தந்திரங்களையும்’ கையாளக்கூடும் என்பதால், கூட்டணி தொடர்பான உறுதிப்பாட்டை விஜய் பொங்கல் வரை ஒத்திவைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் எந்த அணியில் இணைய போகிறார் என்பதை பொறுத்தே, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் முழுவதுமாக வரையறுக்கப்படும் என்பதால், தமிழக அரசியல் கெமிஸ்ட்ரி கரூருக்கு முன், கரூருக்குப் பின் என இரண்டு வகையாக பிரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva