வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் ஏற்படக்கூடிய மின்சார தடைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் விரிவான ஆய்வை மேற்கொண்டார்.
சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின்பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார்.
இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: "மழைக் காலத்தில் மின்சாரம் தடைபடாமல் தளவாடங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும். மின்சாரம் பாதிக்கப்பட்டால் அதனை விரைவாக மீட்டெடுக்கும் குழுக்கள் மாநிலம் முழுவதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்றி, பொதுமக்களும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பலத்த காற்று அல்லது கனமழையால் மரங்கள் மின்கம்பங்களில் விழும் சூழலில், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உடனடி நடவடிக்கை எடுத்து மின்சாரம் விரைவாக மீட்டெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் இணைந்து, தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்களை புதுப்பித்து தயார்நிலைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.