மும்பையில் சாலை பாதுகாப்பு மீறல்கள் குறித்து மீண்டும் கவலை கிளப்பும் வகையில், கோரேகான் பகுதியில் ஓபராய் மால் அருகே ஓடும் ஒரு எஸ்யூவியின் சன்ரூஃப் மீது இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
“சன்ரூஃப் மாருதி ஜிப்சியாக மாறியது” என்ற தலைப்பில் ரெடிட்டில் பகிரப்பட்ட அந்தக் கிளிப்பில், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் மாலை நேர போக்குவரத்துக்கிடையே எஸ்யூவி ஓடுவதும், அதில் பெண்கள் சன்ரூஃஃப் வழியாக நிமிர்ந்து அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
அந்தக் காட்சிகளில் அருகிலிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் இன்றி பயணம் செய்வது தெரிகிறது. இதனால் ஒரே சட்டகத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவியதும் நெட்டிசன்கள் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளனர். பலர் அந்தச் செயலை “பொறுப்பற்றதும் ஆபத்தானதுமாக” கண்டித்துள்ளனர்.
ஒரு பயனர், “அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், “இந்த ‘நவீன’ மக்கள் தாங்கள் எவ்வளவு ஆபத்தில் உள்ளார்கள் என்பதை உணரவே இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர், சம்பந்தப்பட்ட வாகனத்தையும் நபர்களையும் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.