மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையைச் சிறு குழந்தைகள் துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை வெளியான அந்த வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன், துடைப்பம் மற்றும் துடைப்பான் பிடித்து தரையைச் சுத்தம் செய்கிறார்கள். இது, சத்தர்பூர் மாவட்ட கலெக்டர் பங்களாவுக்கு அருகிலுள்ள தேராபஹடி அரசுப் பள்ளியில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி நேரங்களில் மாணவர்களை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் இந்த சம்பவம் பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளனர். சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு இத்தகைய வேலை கொடுத்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சத்தர்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் அலட்சியம் குறித்த புகார்கள் இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன் அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத நிலையில் பெஞ்சில் படுத்து தூங்கிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.