விழுப்புரம் அருகே மணல் கடத்திய நபரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. மீது மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறுவதை முற்றிலுமாக தடுக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு தாலுக்கா காவல் நிலைய எஸ்.ஐ. குணசேகரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு சுதாகரை பிடிக்க முயன்றபோது, அவர் தன்னிடம் இருந்த கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு எஸ்.ஐ. குணசேகரனின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குணசேகரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில், அவரிடம் இருந்த வாக்கி டாக்கி கருவியை எடுத்துக் கொண்டு சுதாகர் அங்கிருந்த தப்பியோடினார்.
இதன் பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட எஸ்.ஐ. குணசேகரன், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தப்பியோடிய குணசேகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த வாரம் மணல் கடத்தல் தொடர்பாக சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.