சென்னை துரைப்பாக்கம் எழில் நகர் மக்களின் இன்றைய அவல நிலை குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இதுதான் துரைப்பாக்கம் எழில் நகர் மக்களின் இன்றைய அவல நிலை. எங்கெங்கோ வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இவ்வளவு குறைகள் நிறைந்த அடுக்குமாடி கட்டடத்தில் குடி பெயர்த்து விட்டு,"ஏகப்பட்ட வீடுகள் உள்ளன, எங்களால் ஒவ்வொரு இடமாகத்தான் சரி செய்ய முடியும்" என்றும், "அது வரை பொறுத்துக் கொள்ளவேண்டும்" என்றும் சொன்னால் அது எப்படி சரியான ஆட்சிமுறை ஆகும்?
மழைக்காலம் வருகிறதென்று தெரிந்தும், சரியான திட்டமிடல் இல்லாமல், எழில் நகர் 11ஆம் ப்ளாக்கில், cool tiles போடுவதற்காக மொட்டைமாடியின் தரையை மொத்தமாக பெயர்த்து எடுத்து விட்டாகி விட்டது. அடுத்த வேலை தொடங்குவதற்குள் மழை வந்தாகி விட்டது. இந்த குடியிருப்புகளின் கட்டுமானத் தரமோ மிக மோசமாக உள்ளதால், தண்ணீர் சுவர் வழியாக கசிந்தும், ஒவ்வொரு மாடியிலும் உள்ள முற்றம் வழியாக கொட்டியும், மிகுந்த இடைஞ்சலை மக்களுக்குத் தருகிறது. சிலரின் வீடுகளுக்கு உள்ளும் எப்படி தண்ணீர் புகுந்து உள்ளது என்பதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
இவ்வளவு அவலங்களுக்கு இடையில், TNUHDB செயற்பொறியாளர் திரு.மகேந்திரனிடம் அந்த ப்ளாக்கில் குறை தீர்க்கும் சங்கம் நடத்தும் பிரேம் என்பவர் புகார் அளித்தபோது, இது போன்ற பதிவுகளை குறிப்பிட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் அனுப்பக்கூடாது என்றும், இது போல இனி அனுப்பினால், போலீசிடம் புகார் அளித்து விடுவேன் என்றும் மிரட்டல் வேறு விடுகிறார். இவ்வளவு மோசமான நிலையில் வாழும் மக்கள் குறை கூறினால், இவர்களுக்கு கோபம் வேறு வருகிறது. இவர்கள் யாராவது இங்கு வந்து பணி முடியும் 6 மாத காலம் வரை தங்கி, வழிந்து கொண்டே இருக்கும் தண்ணியை அப்புறப்படுத்திக் கொண்டே இருப்பார்களா!?!
அமைச்சர் தா. மோ.அன்பரசன் மற்றும் சமூக நீதி பேசும் முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இங்கு வந்து ஒரு நாள் தங்குவாரா? ஏழை மக்கள் என்றால் மட்டும் ஏன் வருகிறது இந்த மெத்தனம், அலட்சியம் மற்றும் பாரபட்சம்!!! இந்த மக்கள் போலீசிடம் நேற்று போய் முறையிட்டதும் , தற்காலிக நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர் மக்கள். மக்களுக்காக தான் அரசு. "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்று வசனம் மட்டும் பேசிக்கொண்டு மக்களை இவ்வளவு மோசமான நிலையில் வைத்து இருக்கிறது TNUHDB" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.