பீகார் மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இரு கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் வெப்பமடைந்துள்ளது.பாஜக–ஜேடியூ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம்–காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் நேரடி மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சி பீகார் அரசியலில் புதிய அதிர்வலை ஏற்படுத்தி வருகிறது.
தொடக்கத்தில், அந்தக் கட்சி 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்திருந்தது.அதன் தொடர்ச்சியாக, தற்போது 25 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை AIMIM வெளியிட்டுள்ளது.ஆச்சர்யமாக, அந்த பட்டியலில் இரு முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், AIMIM மாநில தலைவர் அக்தருல் இம்ரான் அவர்களும் வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.தொடக்கத்தில், அந்தக் கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முனைந்திருந்தது.
இதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவரிடம் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால், AIMIM கட்சி இறுதியாக தனித்து தேர்தல் களத்தில் களமிறங்கும் முடிவை எடுத்துள்ளது.