இப்போதெல்லாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து இருக்கிறது.
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, சைபர் கிரிமினல்களால் பலர் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர்.
மும்பையில் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் மது வகைகளை ஆர்டர் செய்து ரூ. 7 லட்சத்தை சைபர் கிரிமினல்களிடம் இழந்துள்ளது.
மும்பை விலேபார்லே கிழக்கு பகுதியில் செயல்படும் பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றுபவர் பாவேஷ்.
கம்பெனி நிர்வாகம் ஊழியர்களுடன் சேர்ந்து தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட முடிவு செய்தது. இதற்காக மது வகைகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. பாவேஷ் தான் ஆன்லைனில் மது வகைகளை ஆர்டர் செய்து வாங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ரூ.9 லட்சத்திற்கு ஆன்லைனில் ஒயின் ஆர்டர் செய்தார். இதற்காக அவர் பாதி பணத்தை முன்கூட்டியே செலுத்தினார்.
இது குறித்து பாவேஷ் கூறுகையில், "எங்களது பகுதியில் உள்ள பிரபல ஒயின் ஷாப் போன் நம்பர் ஆன்லைனில் இருந்தது. அந்த நம்பருக்கு போன் செய்தபோது அஜய் குமார் என்பவர் பேசினார். அவர் தான் ஒயின் ஷாப் மேலாளர் என்று தெரிவித்தார்.
ரூ.9 லட்சத்திற்கு ஆர்டர் செய்தேன். அதற்கான பில்லை ஜி.எஸ்.டி நம்பரோடு சேர்த்து எனக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தார். நானும் அதனை உண்மையென நம்பினேன். நான் பாதி பணத்தை செலுத்தினேன். அடுத்த நாள் அதே நபர் போன் செய்து முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்று சொன்னார்.
நான் உடனே ஆர்டரை ரத்து செய்ய விரும்புவதாக தெரிவித்தேன். அதற்கு சிறிது பணத்தை பாக்கி வைத்துவிட்டு எஞ்சிய பணத்தை செலுத்துங்கள் என்று சொன்னார்.
நானும் மொத்தம் ரூ.7 லட்சம் அளவுக்கு செலுத்தினேன். ஆனால் சொன்ன நேரத்தில் மது டெலிவரி செய்யப்படவில்லை. அஜய்குமாருக்கு போன் செய்தபோது டெலிவரி வேன் பழுதாகிவிட்டதாக தெரிவித்தார்" என்றார்.
இதையடுத்து பாவேஷ் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சைபர் கிரிமினல்கள் கூகுள் பிஸ்னஸ் புரொபைல் பட்டியலில் உள்ள பிரபல கடைகளின் போன் நம்பர்களை மாற்றிவிட்டு தங்களது போன் நம்பர்களை சேர்த்து இது போன்ற மோசடியில் ஈடுபடுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தீபாவளி பட்டாசு: `செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை' - சென்னை மாநகராட்சி அறிவுரை