'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து மரணம் ... குழந்தைகளுக்கு இயற்கை சிகிச்சை வழிகள்!
Dinamaalai October 20, 2025 06:48 AM

 

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, மருந்து தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டதோடு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மற்ற மருந்துகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) விளக்கம் கேட்டபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மூன்று மருந்துகள் — தமிழ்நாட்டின் ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த ‘கோல்ட்ரிஃப்’, குஜராத்தின் ரெட்னெக்ஸ் பார்மா தயாரித்த ‘ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்’, மற்றும் ஷேப் பார்மா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ‘ரீ லைஃப்’ — ஆகியவற்றில் ஆபத்தான அளவில் டைஎத்திலீன் கிளைகால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு மருந்து தேவையில்லாமல் இயற்கையான முறையில் சளி, இருமலை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவர் ரோஹன் கிருஷ்ணன் கூறியதாவது: “2 வயதுக்குள் குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் கொடுக்கவே கூடாது. போதிய சத்துள்ள உணவு, போதிய ஓய்வு மற்றும் இயற்கை முறைகள் போதுமானவை. நீர் அதிகம் குடிக்கச் செய்தல், நீராவி பிடித்தல், ஒரு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேன் கொடுத்தல், உப்பு நீர் வாய் கொப்பளித்தல், தூங்கும் போது தலையை உயர்த்தி வைப்பது, நாசி சொட்டுகள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற இயற்கை முறைகள் குழந்தைகளின் இருமலை கட்டுப்படுத்த உதவுகின்றன,” என்றார்.

நிபுணர்கள் வலியுறுத்துவதாவது — குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு கடுமையான தரப்பரிசோதனை விதிமுறைகள் அவசியம், மேலும் பெற்றோர் எந்த மருந்தையும் வழங்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.