கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிந்தைய விவாதங்கள் தொடரும் நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக “திருப்பாச்சி” திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்த மல்லிகா கருத்து தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் மல்லிகா கூறியதாவது: “விஜய் சார் பற்றி நிறைய பேர் பேசுறாங்க. நானும் எனது அனுபவத்தை பகிரணும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு நேரங்களில் அவர் எப்போதும் அமைதியாகவும், எளிமையாகவும் இருப்பார். ஆனால் கட்சி தொடங்கிய பிறகு அவர் மக்கள் முன்னால் பேசும் விதம், அவரின் நம்பிக்கை – எல்லாம் ஒரு பெரிய மாற்றமாக தெரிகிறது. அதை பார்க்கும் போது ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
விஜய் சார் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார், மக்கள்முன்னால் அல்ல. நல்லது செய்ய வரும் ஒருவருக்கு இடையூறுகள் வருவது இயல்பு. ஆனால் இறுதியில் அவர் தான் ஜெயிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. கூட்டங்களில் சிலர் சதி செய்ய முயற்சிப்பார்கள், அதனால அண்ணா கொஞ்சம் உஷாரா இருங்க,” என்று மல்லிகா தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.