வெறிச்சோடியது சென்னை.. மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்!
Seithipunal Tamil October 21, 2025 05:48 AM

பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சென்டிரல் முதல் பரங்கிமலை, விமான நிலையம் முதல் விம்கோ நகர் ஆகிய வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இன்று  முதல் 24-ந் தேதி வரையில் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6.30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

காலை 6.30 மணிக்கு பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுகொண்டுள்ளது.இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.

பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.