தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடற்கரையோரம், உருவான குறைந்த காற்றழுத்த பகுதி, புதுச்சேரி அருகே நெருங்கியுள்ளதால், அது அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத்துடன் இணைந்து நிலத்தை நோக்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை குறையும்.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூட மிக கனமழை பதிவாகியுள்ளது. அது போல் சென்னையிலும் நிறைய மழை பதிவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தமானது 1 முதல் 2 நாட்களுக்கு கனமழையை கொடுத்தது. சில இடங்களில் இன்று மழை விட்டு விட்டு பெய்யக் கூடும். ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்களை இந்திய வானிலை மையம்தான் அறிவித்தன. நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்று பிரகாசமான சூரிய ஒளியை என்ஜாய் செய்யுங்கள். துணிகளையும் காய வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து வரும் 25ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகக் கூடும். இது வடதமிழக கடலோரத்தை நோக்கி நகரும். இதுகுறித்து மேலும் தகவல்கள், தற்போதுள்ள காற்றழுத்தம் விலகிச் சென்றால்தான் தெளிவாக தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது போல் அவரது மற்றொரு பதிவில் குறைந்த காற்றழுத்த பகுதி பாண்டிச்சேரியை நோக்கி நகர்ந்துள்ளது. இது அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பள்ளத்துடன் இன்று இணையும். இதனால் மழையை தரும் மேகக் கூட்டங்கள் கடலூர் அல்லது புதுச்சேரிக்கு செல்லும். டெல்டா மாவட்டங்களில் மழை குறையும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மழை விட்டுவிட்டு பெய்யும்.இந்த குறைந்த காற்றழுத்தத்தால் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை கிடைத்ததற்கு மாணவர்கள் நன்றி சொல்லுங்கள். அடுத்த காற்றழுத்தம் குறித்து வரும் 25 ஆம் தேதி பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.