சென்னையில் பருவமழை தீவிரம் – போலீசார் முழுத் தயார்நிலை
சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வெள்ளநீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து துறைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் 12 மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் வீரர்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகளை விரைவாக கண்காணிக்க நகரம் முழுவதும் 39 சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தென்சென்னையில் மட்டும் 23 மினி கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தொலைபேசி எண் 100ல் தொடர்புகொண்டு உதவி கோரலாம். மழை, வெள்ளத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க போலீசார் முழுத் தயார்நிலையில் உள்ளனர்.