செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து மனித வேலைகளையும், ரோபோக்கள் உதவியுடன் செய்துவிடும் என்று எலான் மஸ்க் கணித்துள்ளார். அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே ஊழியர்களை AI மூலம் பதிலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், மஸ்கின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
எலான் மஸ்க் தனது பதிவில், "AI மற்றும் ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் செய்யும்" என்று வெளிப்படையாகக் கூறியதோடு, இதனை ஒரு இருண்ட எதிர்காலமாக கருதாமல், மனிதகுலத்தின் விடுதலையாக பார்க்கிறார்.
அவரது கூற்றுப்படி, எதிர்காலத்தில் "வேலை செய்வது விருப்பத்தின் பேரில்" இருக்கும்; அதாவது, கடையில் வாங்குவதற்கு பதில் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது போல வேலை இருக்கும்.
மேலும், AI ஆதிக்கம் செலுத்தும் அந்த உலகில், மனிதர்கள் வேலைக்கு செல்லாமலேயே தங்கள் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் "உலகளாவிய உயர் வருமானம்" கிடைக்கும் என்றும் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். AI துறையில் மஸ்க் 'xAI' நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva