Gold Price : ஒரே நாளில் சர்வதேச அளவில் சரிவை சந்தித்த தங்கம்.. வெள்ளியும் வீழ்ச்சி அடைந்தது!
TV9 Tamil News October 23, 2025 01:48 PM

தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 22, 2025) கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி, உலக அளவில் தங்கம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை சரசரவென உயர்ந்து வந்த நிலையில், தங்கம் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில்  நிலையில், இந்த சரிவு சாமானிய மக்களுக்கு சற்று ஆதரவை தரும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், உலக அளவில் தங்கம் வீழ்ச்சி அடைந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை புதிய உச்சத்தை எட்ட தொடங்கியது. குறிப்பாக அக்டோபர் 8, 2025 அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.90,000-த்தை தாண்டிய நிலையில், அக்டோபர் 17, 2025 ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வந்த நிலையில், இன்று தங்கம் அதிரடியாக விலை குறைந்துள்ளது.

இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

சர்வதேச அளவில் வீழ்ச்சி அட்டைந்த தங்கம் விலை

தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை அடைந்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 22, 2025) சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் உலக அளவில் தங்கம் விலை 6.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தங்கள் விலை ரூ.95,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.93,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Gold Price : இந்த நாடுகளில் தங்கம் விலை மிக குறைவு.. எந்த எந்த நாடுகள்?

வெள்ளியும் கடுமையான சரிவை சந்தித்தது

தங்கம் விலை மட்டுமன்றி, வெள்ளி விலையும் இன்று சர்வதேச அளவில் கடும் சரிவை சந்தித்தது. ஏற்கனவே சரிவை சந்தித்து வந்த வெள்ளி இன்று 8.7 சதவீதம் சரிவை சந்தித்தது. இன்றைய நிலவரப்படி வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180-க்கும் கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.