புதுச்சேரியில் தீபாவளி என்றால் மது விற்பனையாளர்களுக்கு கொண்டாட்ட காலமே! ஆண்டுதோறும் இந்த பண்டிகை வார இறுதியுடன் இணையும் போது, பாட்டில்களும் பணமும் ஒரே நேரத்தில் ஓடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டின் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.சாதாரணமாக, “கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம்” என்ற செய்தியே தலைப்பாக வரும் நிலையில், இந்த முறை 5 முதல் 10 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளது.
இதற்கான முக்கிய காரணம், மூன்று மாதங்களுக்கு முன் மதுபான வரியில் அரசின் திடீர் உயர்வு. வரி ஏற்றம் பாட்டில்களிலும் பளுவாகப் பட்டது.மேலும், தீபாவளி விடுமுறை நாட்களிலும் கனமழை எச்சரிக்கை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் குறைந்தது. வழக்கமாக தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் இருந்து புதுவைக்கு பீர், பிராண்டி, விஸ்கி வாங்க வருவோர் இந்த முறை காணாமல் போனார்கள்.
அதுமட்டுமல்ல , பிரீமியம் மதுபானங்களின் விலை ஏறி விட்டதால் அதனை வாங்க முனைந்தோர் குறைந்தனர். அதே சமயம், உள்ளூர் மற்றும் குறைந்த விலை பானங்கள் மட்டுமே “பெருமளவில் பாட்டில் ஆனது” என விற்பனையாளர்கள் சிரிப்புடன் கூறினர்.தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே விற்பனை கணக்கை கண்காணிக்க முடிகின்றது.
ஆனால் புதுச்சேரியில் தனியார் கடைகள், மொத்த விநியோக நிலையங்கள், சுற்றுலா மதுபான விடுதிகள், ரெஸ்டோ பார்கள் என பல வழிகளில் விற்பனை நடப்பதால், மொத்த வருவாய் எண்களை மதிப்பிடுவது சிக்கலாகியுள்ளது.எதுவாக இருந்தாலும், இந்த ஆண்டு தீபாவளி புதுச்சேரி மது விற்பனையாளர்களுக்கு “குறைந்த ஒலி – அதிக வரி” கொண்ட பண்டிகையாக மாறியிருப்பது உறுதி.