பெண்கள் மற்றும் முதியர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது அடிக்கடி நடந்து வருகிறது. இதில் நன்றாக படித்தவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மும்பையில் சமீபத்தில் ஒரு முதிய தம்பதியை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ. 58 கோடி அளவுக்கு பறித்துள்ளனர்.
இப்போது சோசியல் மீடியாவில் பிரபலமான ஒருவரை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் மிரட்டி ரூ. 50 லட்சத்தை பறித்துள்ளனர். சைபர் கிரிமினல்கள் புதிது புதிதாக எதையாவது சிந்தித்து தங்களது காரியங்களை சாதித்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் ஆசிம் அகமத் (28). இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் பிரபலமாக உள்ளார். சாப்ட்வேர் எஞ்சினியரான ஆசிம் அகமத் தனது வேலையை விட்டுவிட்டு, இப்போது சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிடுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்.
அதோடு, ஆசிம் அகமத் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனியையும் நடத்தி வருகிறார். ஆசிம் அகமத்தை கடந்த ஒரு ஆண்டாக டிஜிட்டல் கிரிமினல்கள் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
இது குறித்து ஆசிம் அகமத் கூறுகையில்:
"கடந்த ஒரு வருடமாக எனது பதிவுகளுக்கு காப்புரிமை கோரி போலியான மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் வெளியிடும் பதிவுகளை அவர்கள் உருவாக்கியது என்றும், அதற்காக தங்களுக்கு பணம் கொடுக்கவில்லையெனில் எனது அக்கவுண்டை டெலிட் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
எனது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் பறிபோய்விடக்கூடாது என்பதற்காக அவர்கள் கேட்ட நேரமெல்லாம் பணம் கொடுத்தேன். இதுவரை 50 லட்சம் வரை கொடுத்துவிட்டேன்.
அவர்கள் போன் மூலமும், இமெயில் மூலமும் மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களை இடைத்தரகர்கள் என்று கூறிக்கொண்டிருந்தனர்" என்றார்.
இது குறித்து ஆசிம் அகமத் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஜபல்பூர் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி நீரஜ் கூறுகையில்:
"இது ஒருவகையான புதிய வகை சைபர் மோசடியாகும். இது குறித்து இன்ஸ்டாகிராம் டீமிடமும் விசாரித்து வருகிறோம்" என்றார்.
ஆசிம் அகமத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 57 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். 2017ம் ஆண்டு முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கினார். அதன் பிறகு கொரோனா காலத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
`ஆன்லைனில் மது ஆர்டர்' - ரூ. 7 லட்சத்தை இழந்த சினிமா நிறுவனம்; சைபர் கிரைம் மோசடி