திருப்பரங்குன்றம், பழநி மலைக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இவ்வாண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று (அக்டோபர் 22) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது.
விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 01 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 02 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது, தொடர்ந்து காலை 06 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
இதனையடுத்து, யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு ஆகியோர் பூஜை நடத்துவதற்கான நிர்வாக அனுமதியை காப்பு கட்டிய பட்டருக்கு வழங்கினர்.
அடுத்ததாக, திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாகும். இங்கு கந்த சஷ்டி திருவிழா, இன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி மூலவர், சின்னக்குமாரர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர், வீரபாகு, நவவீரர்கள், மயில், சேவல், தீப ஸ்தம்பம் மற்றும் கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து 28-ஆம் தேதி மலைக்கோயிலில் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும். இரவு 07 மணிக்கு மேல் 08 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முருகனின் முதலாம் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியுள்ளது. இங்கும் வரும் 27-ஆம் தேதி சூரசம்ஹாரம், மறுநாள் (அக்டோபர் 28) திருக்கல்யாணம் நடைபெறஉள்ளது.
இதனையொட்டி இன்று முதல் பக்தர்கள் விரதம் தொடங்கினர். சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை, 27-ஆம் தேதி வரை கோயிலில் தங்கி விரதமிருந்து முருகனை வழிபட உள்ளனர். இதேபோல ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளது.