வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் கர்நாடகாவிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதன் தாக்கத்தில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மாறி மாறி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி அணைகளில் நீர் மட்டம் பெரிதும் உயர்ந்ததால், அவற்றிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு மொத்தம் 18,900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர்வரத்து பிலிகுண்டுலு வழியாக தமிழகம் நோக்கி பாய்ந்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை 28 ஆயிரம் கனஅடியில் இருந்து இன்று 32 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.மேலும், நீர் பெருக்கால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மெயின் அருவிக்குச் செல்லும் நடைபாதையிலும் நீர் மோதியதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கலெக்டர் சதீஷ் இரண்டு நாட்களாக அருவியில் குளிக்க தடை விதித்துள்ளார்.இந்த அருவி நுழைவு பாதை பூட்டப்பட்ட நிலையில், போலீசார் அங்கு கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், ஆற்றங்கரையில் நின்று வெள்ளப்பெருக்கை ரசித்து, மீன் சாப்பாடு வாங்கி பூங்காவில் அமர்ந்து மகிழ்ந்தனர்.இதேசமயம், கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஒகேனக்கல்லில் நீர்மட்டம் இன்னும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.