தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் மழையில் தத்தளிக்கின்றன.திருவாரூரில் கடந்த 10 நாட்களாக இடைவிடாத மழையால், அழகிரி காலனியில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்து, மக்கள் அவதியில் உள்ளனர்.

மின்சாதனங்கள் சேதம், கழிவுநீர் கலப்பு என பொதுமக்கள் தங்களே தண்ணீர் அகற்றி வருகிறார்கள். “அதிகாரிகள் அலட்சியம் காரணம்” என மக்கள் குற்றம் சாட்டினர்.இதேநேரம், நன்னிலம், முடிகொண்டான், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன.
“ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 செலவழித்து பயிரிட்டோம், இப்போது எல்லாம் வீணாகி விட்டது” என விவசாயிகள் கண்ணீர் மல்க பேசினர். அரசு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், மயிலாடுதுறையில் புதுத்துறையில் வீடு இடிந்து விழுந்ததில், 15 வயது சிறுமி சுவேதா பலத்த காயம் அடைந்தார்.
தஞ்சாவூரில் பாபநாசம், பூதலூர் பகுதிகளில் மழைநீர் தேங்கி, வீடுகள் குளமாக மாறியுள்ளன. விஷபூச்சிகள் புகும் அச்சத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.இந்த மழையால் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து, அறுவடை முடியாமல் போனதால் விவசாயிகள் கடனில் தத்தளிக்கின்றனர். “அரசு நேரடி ஆய்வுக்கு வந்து நிவாரணம் வழங்க வேண்டும்” என அவர்களின் கோரிக்கை வலுப்பெறுகிறது.