கரூர், அக்டோபர் 24: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், முதற்கட்ட விசாரணை அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு கடந்த 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சனிக்கிழமை தோறும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் செப்டம்பர் 27ஆம் தேதி காலையில் நாமக்கல் மாவட்டத்திலும், மாலையில் கரூர் மாவட்டத்திற்கு அவர் சென்றார். கரூரில் அவர் வேலுச்சாமிபுரம் என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தமிழக அரசு சார்பிலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
Also Read: தன் மகளை விட அதிக மதிப்பெண் ;. எலி பேஸ்ட் வைத்து சிறுவனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை
ஆனால் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மேற்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மிகப்பெரிய சதி நடந்து இருப்பதாக கூறி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் அல்லது சிறப்பு விசாரணை குழுவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கும் என்றும், இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது.
அதில் இரண்டு தமிழ்நாடு கேடரைச் சார்ந்த, ஆனால் அந்த மாநிலத்தை சாராத இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட சிபிஐ குழு, கூடுதல் எஸ்பி முகேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை இந்தக் குழு பார்வையிட்டது.
Also Read: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு ; என்ன நடந்தது?
இதற்கிடையில், அதிகாரிகள் தீபாவளி விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 22ம் தேதி விசாரணை தொடர்ந்தது. இதனிடையே நியமிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகளுடன், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பிஎஸ்எஃப் ஐஜி சுமித் சரண் மற்றும் சிஆர்பிஎஃப் ஐபிஎஸ் அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகியோர் இந்த விசாரணை குழுவில் இணைந்தனர். இந்நிலையில் எட்டு நாட்கள் விசாரணைகளை மேற்கொண்ட எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர், அக்டோபர் 23ம் தேதிகரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் II மற்றும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் முதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.