Weather Update: இன்று உருவாகும் புதிய காற்றழுத்தம்.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
TV9 Tamil News October 24, 2025 09:48 PM

தமிழ்நாடு, அக்டோபர் 24: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இப்படியான நிலையில் அக்டோபர் 24ம் தேதியான இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் கனமழை பெய்தது.

இதனால் நீர் நிலைகள் நிரம்பிய பல இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டோடியது, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லாமல் வலுவிழுந்தது. இதனால் மழை படிப்படியாக குறையும் என கூறப்பட்ட நிலையில் 2025 அக்டோபர் 24ஆம் தேதி தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 24ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் ஆகியவற்றில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதேசமயம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் அக்டோபர் 27ம் தேதி வரை நல்ல மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மழைக்காலத்தில் வாகனம் ஓட்டும் நபரா நீங்கள்..? இந்த விஷயங்களில் கவனம்!

அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று மத்திய கிழக்கு வங்கக்கடலின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட இந்நாளில் மீனவர்கள் கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே சென்றிருப்பவர்கள் 24ஆம் தேதி  மாலைக்குள் கரை திருப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழைப்பொழிவால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.