சமூக ஊடகங்களில் தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியில் இருந்து பீகாருக்குச் செல்லும் ரயிலில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலைக் காட்டுவதாக இந்த வீடியோ உள்ளது. இதில், இரண்டு பெண்கள் ரயிலின் படுக்கை (Berth) பகுதியில் எப்படியோ ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது கீழே இருந்த ஆண்கள் சிலர், தங்களுக்கு இடம் வேண்டும் என்ற நோக்கத்தில், அந்தப் பெண்களின் தலையைப் பிடித்துக் கீழே இழுக்க முயல்கின்றனர். இந்தச் செயல் பார்க்க மிகவும் அருவருப்பாகவும், வெறுப்பூட்டுவதாகவும் உள்ளது.
பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, ஆண்கள் பலர் ஒன்றுசேர்ந்து அந்தப் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதுபோல் வீடியோவில் தெரிகிறது. முழுப் பெட்டியிலும் குழப்பம் நிலவுகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @NazneenAkhtar23 என்ற கணக்கு, “ரயிலில் மகாபாரதம் ஆரம்பித்துவிட்டது. பீகாரில் நிலைமை இப்படித்தான்” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளது. இந்த 10 விநாடி கிளிப் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வன்முறைச் செயலால் கோபமடைந்த பல பயனர்கள், “ரயில்வே காவலர்கள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?” என்றும், “நாகரிகம் அற்றவர்களின் பாலியல் அத்துமீறல் இது” என்றும் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.