Louvre Museum Heist: ரூ.847 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்படாமல் போகலாம் - ஏன்?
Vikatan October 24, 2025 09:48 PM

பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிறு (அக்டோபர் 19) அன்று பழம்பெரும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. உலகிலேயே அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் சில நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட கொள்ளை பாரிஸ் நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒரு காலத்தில் பிரஞ்சு அரச குடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்ட மின்னும் நீலமணிகள், மரகதங்கள் மற்றும் வைரங்கள் பொருத்திய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கொள்ளை மொத்தமாக 7 நிமிடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது என்றனர். ஆனால் தற்போது 4 நிமிடங்களில் கொள்ளையர்கள் உள்நுழைந்து வெளியேறியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய, துல்லியமான கொள்ளை இதுவாக இருக்கலாம் என்கின்றனர்.

திருட்டுப்போன பொருட்கள்:

ஒரு மரகத நெக்லஸ் மற்றும் காதணிகள், இரண்டு கிரீடங்கள், இரண்டு ப்ரூச்கள் (உடையில் அணியப்படும் க்ளிப் போன்ற அணிகலன்), நீலமணி (sapphire) நெக்லஸ் மற்றும் ஒரு காதணி.

louvre

இவற்றில் ஒன்று மன்னர் மூன்றாம் நெப்போலியன் அவரின் மனைவிக்குப் பரிசாக வழங்கியது எனக் கூறப்படுகிறது. இதுதவிர 1,354 வைரங்களும் 56 மரகதங்களும் கொண்ட ராணி யூஜினின் கிரீடத்தை கொள்ளையடித்தும் வழியில் கீழே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நகைகள், அணிகலன் செய்யும் கலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை. பிரான்ஸின் ஆதிக்கத்தையும், செல்வத்தையும் வெளிப்படுத்துபவை. 1887ம் ஆண்டு பெரும்பாலான அரச நகைகள் ஏலம் விடப்பட்டன. அந்தக் காலத்தில் அவற்றில் சிலவற்றையே கண்டுபிடித்து பாதுகாக்க முடிந்தது.

Louvre Museum: கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்படுவது கஷ்டம் - ஏன்?

லூவர் அருங்காட்சியத்தில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க, கலைப்பொருட்கள் உள்ளன. டாவின்சி வரைந்த மோனாலிசா உட்பட உலகின் தலைசிறந்த ஓவியங்கள், கிரேக்க பேரரசின் எச்சங்கள், 2000 ஆண்டுகள் பழைமையான சிலைகள், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆவணங்கள், போர்க்கருவிகள் உள்ளன.

ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிப்பதே மிகப் பெரிய சாகசமாகக் காட்டப்படும். அந்த அளவு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகக் கருதப்பட்டது. 130க்கும் மேற்பட்ட கேமராக்கள் இருக்கும் அருங்காட்சியகத்தில் திருடர்கள் நுழைந்த பால்கனியில் மட்டுமே சரியாக கவரேஜ் இல்லை.

Louvre Museum

அப்பல்லோ கேலரியின் அருகில் உள்ள அந்த பால்கனியில் angle grinder (வட்டு அரைக்கும் கருவி) மூலம் துளையிட்டு உள்நுழைந்துள்ளனர். திருட்டு நடந்து நான்கு நாட்கள் ஆகியும் காவல்துறையால் சந்தேகத்துக்குரிய நபர்களை அடையாளம் காண முடியவில்லை. தாமதாமாகும் பட்சத்தில் திருடப்பட்ட நகைகளை உடைத்து அதன் கற்கள் மற்றும் உலோகத்தை தனித்தனியாகப் பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

திருடர்கள் எளிதாக ஏணிகளைப் பயன்படுத்தி உள் நுழைந்ததால், நாட்டின் அரும்பெரும் சொத்துக்களாகக் கருதப்படும் அருங்காட்சியகங்கள் பாதுகாப்பற்றிருப்பதை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் பிரான்ஸின் வரலாற்றுச் சின்னங்கள் கொள்ளையடிக்கப்படுவது நாட்டின் வீழ்ச்சியைக் குறிப்பதாக நம்புகின்றனர்.

லூவர் அருங்காட்சியகம் கூறுவதன்படி, திருடப்பட்ட நகைகள் அவற்றின் வரலாற்றுச் சிறப்பைக் கணக்கெடுக்காமலேயே 102 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையவை. இந்திய மதிப்பில் ₹846.6 கோடி. திருட்டு நடந்த 3 நாட்களுக்கு மூடிவைக்கப்பட்ட அருங்காட்சியகம் கடந்த புதன் அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட விசாரணை அதிகாரிகள் காணாமல் போனவற்றைக் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நகைகள் மீட்கப்படுபதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.