வானிலை நிலவரம், அக்டோபர் 24, 2025: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (24-10-2025) காலை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று 0830 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வருகின்ற 26 -ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27 -ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உருவாகும் மோன்தா புயல்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியபடி வருகிறது. இந்த சூழலில், வரவிருக்கும் அக்டோபர் 27, 2025 அன்று வங்கக்கடலில் ‘மோன்தா’ புயல் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அக்டோபர் 24, 2025 தேதியான இன்று அதே பகுதியில் நிலவுவதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியை கடந்துசெல்லக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: லிஸ்டில் 5 சின்னம்.. விசில் தான் வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க திட்டம்..
திருவள்ளூரில் பதிவான 15 செ.மீ மழை:பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 15, நாலுமுக்கு (திருநெல்வேலி) 12, ஊத்து (திருநெல்வேலி) 11, அரக்கோணம் (ராணிப்பேட்டை) 10, பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை) தலா 9, காக்காச்சி (திருநெல்வேலி) 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:இதன் காரணமாக, அக்டோபர் 24, 2025 தேதியான இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. சிபிஐ முதல் விசாரணை அறிக்கை தாக்கல்
அதே சமயத்தில், அக்டோபர் 25, 2025 அன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், அக்டோபர் 26, 2025 அன்று விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி?அக்டோபர் 27, 2025 அன்று புயல் உருவாகும் வாய்ப்புள்ள சூழலில், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரை, பொதுவாக மேகமூட்டமான வானிலையுடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.