ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டம் சின்னதேகுரு கிராமம் அருகே பயணிக்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது.
பேருந்து எதிரே சென்ற இருசக்கர வாகனத்தை மோதியதில், அந்த வாகனம் பேருந்தின் கீழ் சிக்கி தீப்பற்றியது. சில நொடிகளில் பேருந்து முழுவதும் தீக்கிரையாகியது.
அந்த நேரத்தில் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தீ வேகமாக பரவியதால் பலர் கண்ணாடி ஜன்னலை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர். ஆனால் பலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 18 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பேருந்து விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், “ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த துயரமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.