அமெரிக்கா விதித்த கடுமையான வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதி சந்தை சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்புகளை முறியடித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.7% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் வர்த்தக அடித்தளம் வலுப்பெற்று வருவதையும், கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தீவிர உலகளாவிய இராஜதந்திர உழைப்பால் கிடைத்த பலனையும் இது தெளிவாக காட்டுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருந்த நிலையில் அதன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா, ஆகஸ்ட் 27 முதல் ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், தோல் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் உட்பட பல இந்தியப் பொருட்களுக்கு 50% வரை அதிக வரிகளை விதித்தது.
இதன் உடனடி விளைவாக, செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 12% வரை குறைந்தது. குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற துறைகள் மிக கடுமையான சரிவை சந்தித்தன. இந்த நிலை, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பையும் எதிர்மறைதிக்கு இட்டு செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர்.
ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மொத்த சரிவைத் தவிர்த்து, வளர்ச்சியை பதிவு செய்ததன் பின்னணியில், மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களும், பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டுகால வெளியுறவு கொள்கையும் முக்கிய பங்காற்றின.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அமெரிக்கா போன்ற ஒற்றை சந்தையைச் சார்ந்திருப்பதன் அபாயத்தை உணர்ந்து, வர்த்தகத்தை தீவிரமாகப் பல்வகைப்படுத்தும் வியூகத்தை மேற்கொண்டது. மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள் ஆடம்பர செலவு, வெட்டி செலவு என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், இந்த பயணங்கள் உலகளாவிய தலைவர்களுடன் அவர் ஏற்படுத்தியுள்ள ஆழமான நட்பு மற்றும் பரஸ்பர நம்பகத்தன்மை ஆகியவை, இந்தியாவின் சரக்குகளுக்கு புதிய மற்றும் எளிதான சந்தை அணுகலை வழங்கியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல பிராந்தியங்களுடன் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் நெருங்கிய இராஜதந்திர உறவுகள், ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி மாற்றாக அமைந்தன.
செப்டம்பர் மாதத்தில், சீனா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, இத்தாலி, மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்தது. கிரிசில்ஸ் தரவுகளின்படி, அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதி 10.9% வளர்ச்சியை பதிவு செய்தது, இதுவே ஒட்டுமொத்த வளர்ச்சியை தக்கவைக்க முக்கிய காரணம்.
செப்டம்பர் மாத தரவுகள், இந்தியாவின் ஏற்றுமதி தளம் பலமானதாகவும், ஒற்றை நாடு சார்ந்த அபாயங்களிலிருந்து விடுபட்டதாகவும் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த புதிய வேகத்தை தக்கவைத்துக்கொள்ள, மத்திய அரசு பின்வரும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் உடன் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியனுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது. இது நிறைவேறினால், இந்திய ஜவுளி, தோல் மற்றும் இயந்திரங்களுக்கு புதிய மற்றும் பெரிய சந்தை திறக்கப்பட்டு, அமெரிக்க வரிகளால் ஏற்பட்ட இழப்புகள் நிரந்தரமாக ஈடுசெய்யப்படும்.
புதிய சந்தை ஆதிக்கம்: வர்த்தக மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள், ஏற்றுமதியாளர்களை ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற புதிய மற்றும் வேகமாக வளரும் சந்தைகளில் ஆக்ரோஷமாக விரிவாக்கம் செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் உலகளாவிய பங்களிப்பு மற்றும் ராஜதந்திர அணுகுமுறையே, இந்த சவாலான நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தைகளை விரைவாக கண்டுபிடிக்கும் திறனையும், வெளிநாட்டு வர்த்தகத்தில் நம்பிக்கையையும் அளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. உலகளாவிய பொருளாதார மந்தநிலை நிலவினாலும், நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை விரைந்து முடிப்பதன் மூலம் இந்த வேகத்தை இந்தியா நிலைநிறுத்த வேண்டியது அவசியம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva