வடகிழக்கு பருவமழை தற்போது முழு தீவிரத்துடன் கொட்டியடித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதோடு, கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பதிவாகியுள்ளது. இதன் தாக்கமாக, காவிரி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயரும் நிலை காணப்படுகிறது.

கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்களான கிருஷ்ணராஜசாகர் (KRS) மற்றும் கபினி அணைகள் இப்போது முழுமையாக நிரம்பியுள்ளன. அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், வினாடிக்கு 18,900 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டது.இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் பாய்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக, நேற்று இரவு வினாடிக்கு 28,000 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சின்ன பால்ஸ், ஐந்தருவி போன்ற இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சியை காணலாம்.
நீரின் வேகத்தால், நடைபாதைகள் முழுவதும் தண்ணீர் மூழ்கியுள்ளன.மேலும், பாதுகாப்பு காரணங்களால், காவிரி ஆற்றில் குளிப்பதற்கான தடை மூன்றாவது நாளாகவும், பரிசல் இயக்கத் தடை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதேசமயம், பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி நீர்வரத்தை துல்லியமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.