தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.