சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகளின் 'திரிசூல்' போர் ஒத்திகை: பீதியில் பாகிஸ்தான்..!
Seithipunal Tamil October 26, 2025 12:48 PM

பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதியில் வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை முப்படைகளும் இணைந்து 'திரிசூல்' என்ற பெயரில் பயிற்சியில் ஈடுபடப் போவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒரே நேரத்தில் போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளன. முப்படைகளின் கூட்டு நடவடிக்கை திறன், தன்னிறைவு மற்றும் படைகளின் புதுமையான நடவடிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குஜராத் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு இடையே அமைந்துள்ள சர்கிரீக் பகுதியில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது. இதனையடுத்து பயிற்சி நடக்கும் நாட்களில் இப்பகுதிகளில் விமானம் பறக்க வேண்டாம் என்ற (NOTAM) அறிவிப்பை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர் கிரீக் பகுதியானது பாதுகாப்பு மற்றும் ராணுவ திட்டமிடலுக்கு முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாக உளவுத்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது கூறியதாவது: சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் செயல்பட துணிந்தால், அதற்கான பதிலடி வலிமையாக இருக்கும். இது வரலாறு மற்றும் புவியியலை மாற்றி எழுதும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் இந்தப் பகுதியில் இந்திய முப்படைகள் பயிற்சியில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான், அக்டோபர் 28- 29 தேதிகளில் தனது மத்திய மற்றும் தெற்கு வான்வெளியில் பல விமானப் போக்குவரத்து வழித்தடங்களை கட்டுப்படுத்தும் வகையில் NOTAM(Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும், இதற்கான காரணத்தை பாகிஸ்தான் கூறவில்லை. இருப்பினும் இது ராணுவ பயிற்சி அல்லது ஆயுத சோதனையுடன் தொடர்பு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.