தஞ்சை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்பியதாக கூறி ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரிடம் ரூ.47 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் வசிக்கும் 64 வயது பெண் ஒருவர், கடந்த ஜூலை 8ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை பெற்றார்.

அப்போது அழைத்த பெண், “நான் உன்னுடன் கல்லூரியில் படித்த தோழி... இப்போது லண்டனில் வசிக்கிறேன்” என கூறி நம்பகத்தன்மையுடன் உரையாடியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஓய்வுபெற்ற பெண், வாட்ஸ்அப் வழியாகவும் அவளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
இதில் சில நாட்களில், அந்த போலி “தோழி” தனது கணவர் இறந்துவிட்டதாகவும், தனியாக லண்டனில் வாழ்வதாகவும் கூறி, இரக்கத்தை கிளப்பியுள்ளார். பின்னர், “உனக்காக பரிசுப்பொருட்கள் அனுப்பி வைத்துள்ளேன்” என கூறியதும், போலியான “ஏர்லைன் கார்கோ ஏஜென்சி” என்ற பெயரில் மற்றொருவர் அழைத்துக் கொண்டு, அந்த பார்சலில் ₹40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன என்று நம்பவைத்துள்ளனர்.
அதன் பின்னர், வரி, இன்சூரன்ஸ், நாணய மாற்றம் போன்ற பெயர்களில் பல கட்டங்களாக ரூ.46.91 லட்சம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பார்சல் எட்டாத நிலையில், தொலைபேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதை பார்த்த அவர் தான் மோசடிக்குள்ளானதை உணர்ந்தார்.
மேலும், அதிர்ச்சியடைந்த அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.