IMD website வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்டோபர் 26) ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 990 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
அது பின்னர் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலை ஒரு சூறாவளி புயலாக மாறும்.
அதன் பிறகு அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28 ஆம் தேதி காலை 5.30 மணிக்குள் ஒரு தீவிர சூறாவளி புயலாக மாறும்.
தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே அன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
IMD website இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி & கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
அக்டோபர் 25
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.
அக்டோபர் 26
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.
அக்டோபர் 27
திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகவும் கனமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.
அக்டோபர் 28
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கைதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஆகவே அக்டோபர் 25 முதல் 28 வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது?அக்டோபர் 1 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 296.8 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ராணிப்பேட்டை 292.8 மில்லிமீட்டர் மழை பெற்றிருக்கிறது. சென்னையில் 238.3 மில்லிமீட்டர் மழை இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியிருக்கிறது.
குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 120.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தமிழ்நாட்டை விடவும் அதிகம் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியில் 353.9 மில்லிமீட்டர் மழையும், காரைக்காலில் 312.1 மில்லிமீட்டர் மழையும் பெய்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு