மும்பையின் மலாடில் உள்ள இன்டர்ஃபேஸ் ஹைட்ஸ் சொசைட்டிக்குள் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி மாலை சுமார் 5:30 மணிக்கு ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில், ஏழு வயது சிறுவன் ஒருவன் கார் மோதி படுகாயமடைந்துள்ளான். அன்வே மஜும்தார் என்ற அந்தச் சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் அவன் கால் மீது ஏறியது.
இந்தக் காரை, அந்தச் சொசைட்டியின் செயலாளரின் மனைவி எனக் கூறப்படும் ஸ்வேதா ஷெட்டி ரத்தோட் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனின் தாயார் மஹுவா மஜும்தார், ஓட்டுநர் அதிக வேகத்துடனும், பொறுப்பற்ற முறையிலும் காரை ஓட்டியதாகவும், விபத்துக்குப் பிறகு உதவி செய்யாமலும் சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாங்கூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காரை பறிமுதல் செய்து, சிசிடிவி காட்சிகளையும், சாட்சிகளின் வாக்குமூலங்களையும் வைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.