நேற்று இரவு 11.30 மணியளவில் ‘மோந்தா’ புயல் வலுவடைந்தது. தற்போது இது சென்னையிலிருந்து கிழக்கே 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புயல் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும். அந்த நேரத்தில் காற்று மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதனால், வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயல் காரணமாக சென்னை மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றாலும், மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், மோந்தா புயல் சென்னைக்கு குளிர்ச்சியான வானிலையைக் கொண்டு வரும் என்றும், பரவலாக மிதமான முதல் மிதமான கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளார். வடசென்னையில் 50 முதல் 70 மில்லிமீட்டர் வரை, தென்சென்னையில் 10 முதல் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, புலிகாட் போன்ற ஆந்திர எல்லைப் பகுதிகளில் மட்டும் கனமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடசென்னையில் மட்டும் இடியுடன் கூடிய மழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், மழை திங்கள்கிழமை காலை தொடங்கி நாள் முழுவதும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை காலை மழை குறையும் என்று தெரிவித்துள்ளார்.