நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கட்சி துவங்கியது முதலே அவர் பேசும் மேடைகளில் அல்லது விழாக்களில் தொடர்ந்து திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.இதையெல்லாம் பார்க்கும் போது திமுகவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே விஜய் அரசியலுக்கு வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஸ்டாலினுக்கு பின் உதயநிதி, அவருக்கு பின் இன்பநிதி என வாரிசு அரசியலை அவர் விரும்பவில்லை என்கிறார்கள். அதேநேரம் அனுபவம் இல்லாத நிர்வாகிகள் தவெகவின் பெரிய பலவீனமாக இருக்கிறது.
அதுதான் விஜய் கரூர் சென்ற போது ஏற்பட்ட துயரமான சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை.. நாங்கள் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என தவெக நிர்வாகிகள் சொன்னாலும் தவெக மாவட்ட செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சரியான பயிற்சி இல்லை என அரசியல் விமர்சிகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். மக்களும் அதை பேசுகிறார்கள்.

ஒருபக்கம் கரூர் சம்பவத்திற்கு பின் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கரூர் சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத தமிழக அரசுதான் காரணம் என அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமில்லாமல் அதிமுகவின் அடுத்த கட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகிறார்கள்.
மேலும் திமுகவை வீழ்த்த வேண்டுமானால் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ‘இந்த தேர்தலில் விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவை அழித்து விடுவார்கள் என ஓப்பனாகவே பேசினார்.

அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘விஜய் ஒரு ஸ்டார்.. அவருக்கென ஒரு மாஸ் இருக்கிறது. அவருக்காக மக்கள் கூடுகிறார்கள். அதை ஓட்டாக மாற்ற வேண்டுமெனில் விஜய் அதிமுக கூட்டணியில் சேர்வது நல்லது. அவரின் அரசியல் எதிர்காலத்திற்கும் அது நல்லது. தவெகவில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அவர்களுக்கான பயிற்சியாக அதிமுக நிர்வாகிகள் இருப்பர்கள். விஜய் வரவில்லை என்றாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி இல்லை என்றால் அதிமுக 150 தொகுதிகளில் ஜெயிக்கும். விஜய் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அதிமுக கூட்டணி 220 தொகுதியில் வெற்றி பெறும் என்று பேசி இருக்கிறார். அதாவது விஜய் அதிமுகவுடன் இணைந்தால் 70 இடங்கள் அதிகமாக பெறலாம் என்பதே அவரின் ஓபன் ஸ்டேட்மெண்டாக இருக்கிறது.
அதேபோல் அரசியல் மேடைகளில் பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் கூட்டணியில் விஜய் இணைவார் என மறைமுகமாக பேசி வருகிறார். ஒருபக்கம், இதுபற்றி கருத்து சொல்லும் அரசியல் விமர்சனங்கள் ‘விஜய் தனித்து நின்றால் வாக்குகள் பிரியும். இது திமுகவிற்கு சாதகமாக அமையும். கரூர் சம்பவத்திற்கு பின் அதிமுக பலமடைந்திருக்கிறது. தற்போது ஏன் ஓபிஎஸை கூப்பிடவில்லை? ஏன் டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் இணைக்கவில்லை? என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெக கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் அந்த சம்பவத்திற்கு பின் கடந்த ஒரு மாத காலமாக தவெகதான் பேசு பொருளாக மாறி இருக்கிறது. விஜய் இந்த தேர்தலிலேயே அதிகாரத்தை விரும்பினால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது நல்லது. அப்படி நடந்தால் அவர் எதிர்கட்சி தலைவராக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இன்னும் அவர் 5 வருடங்கள் அவர் காத்திருக்க வேண்டும்’ என சொல்கிறார்கள்..
முடிவு விஜயின் கையில் இருக்கிறது!...