வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயலின் தீவிரத் தாக்கம் காரணமாக, புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவுக்கு அருகே கரையை கடக்க உள்ள நிலையில், ஏனாம் பகுதி காக்கிநாடாவை ஒட்டியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (அக். 27) முதல் வரும் 29-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து ஏனாம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.