புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அம்மாபட்டினம். இந்த ஊரைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் 50- க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் சுற்றி வந்த வெறிநாய் ஒன்று, அவர் ஆசையோடு வளர்த்து வந்த ஆடுகளை கடித்துவிட்டது. வெறி நாய் கடி விஷம் என்பதால் நாய் கடித்த ஒன்பது ஆடுகளும் சுருண்டு விழுந்து இறந்தன. இதனை பார்த்த ஆட்டின் உரிமையாளர் முகமது ரியாஸ் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது நின்றார். அதன்பிறகு, இறந்து போன ஆடுகளை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே இறந்து போன 9 ஆடுகளையும் சாலையின் குறுக்கே வைத்து, அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
goats with farmer
அப்போது அவர், 'இறந்து போன ஆடுகளுக்கு நிவாரணம் வேண்டும். இன்னைக்கு என்னோட ஆடுகளை நாய் கடித்துவிட்டது. நாளைக்கு உங்கள் ஆடுகளுக்கு இப்படி நாய்களால் ஆபத்து வரும். அதனால், வேடிக்கை பார்க்காமல் என்னோட வந்து போராடுங்க' என்று கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், போக்குவரத்து நிறைந்த கிழக்குக் கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த இறந்து போன ஆடுகளை அப்புறப்படுத்திய பின், போக்குவரத்து சீரான நிலைக்கு திரும்பியது. நாய் கடித்து இறந்து போன ஆடுகளுடன் விவசாயி ஒருவர் சாலை மறியல் போராட்டம் நடத்தியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.