கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை, இப்போது திடீரென சரிவை சந்தித்துள்ளது. இதனால், அதிக விலைக்கு தங்கம் வாங்கியவர்கள் தற்போது விற்றுவிடலாமா என குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலை குறித்து பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.97,000 வரை சென்றது. ஆனால் கடந்த சில வாரங்களாக விலை சரிந்த நிலையில், தற்போது அது சவரனுக்கு ரூ.92,000 என விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூ.5,000 வரை சரிந்ததனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது –“வெள்ளி பக்கமே போக வேண்டாம். இன்னும் அது குறையும் வாய்ப்பு இருக்கு. சில்வர் பியூச்சர்ஸ் மார்க்கெட் இன்னும் பலவீனமா இருக்கு. இப்போ விற்கப் போனால் 140 ரூபாய் தான் கிடைக்கும். 195-200 ரூபாயில் வாங்கியவர்கள் 40% லாபம் அடைந்தால் தான் வாங்கிய விலை வரும். ஆகவே, இன்னும் 5-10% வரை சரிவு இருக்க வாய்ப்பு உண்டு.”
தங்கத்தைப் பற்றி அவர் மேலும் கூறியதாவது –“உங்கள் முதலீட்டில் அதிகபட்சம் 10% தங்கம் இருந்தால் போதும். அதாவது 200 முதல் 400 கிராம் வரை வைத்திருப்பது போதுமானது. 400 கிராமுக்கு குறைவாக இருந்தால் தான் கொஞ்சம் கொஞ்சமா வாங்கலாம். ஆனால் தங்கத்தை இப்போ விற்றுவிடும் யாராவது இருந்தால், அவர் முட்டாள்தான்! எதிர்காலத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20,000 வரை போகும். எனவே விற்பது பெரிய தவறு,” என்றார்.
மேலும், “தங்கம் விலை குறையும்போது அது விற்க வேண்டிய நேரம் இல்ல, வாங்க வேண்டிய வாய்ப்பு தான். அடுத்த ஆண்டுக்குள் தங்கம் விலை டாலர் மதிப்பில் $5000 வரை சென்று விடும். இப்போது அது $4100 ரேஞ்சில் தான் இருக்கு. எனவே விலை குறைந்தது ஒரு தற்காலிக நிலை மட்டுமே” என்று கூறினார்.
சிலர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும்போது அவர், “தங்கத்தை விற்று பங்குகளை வாங்குவது, பங்குகளை விற்று தங்கம் வாங்குவது — இரண்டு முட்டாள்தனங்கள் தான். உங்களிடம் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை தங்கமாகவும், மற்றொன்றை பங்குகளாகவும் வைத்திருப்பதே புத்திசாலித்தனமான முதலீடு” என விளக்கினார்.
இறுதியாக அவர் வலியுறுத்தியது —“இது ஒரு பொருளாதார பார்வை மட்டுமே. இதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எந்த முதலீட்டும் செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டும்” என்பதாகும்.
மொத்தத்தில் தங்கம் விலை குறைவு என்பது விற்பனைக்கு அல்ல, வாங்குவதற்கே ஒரு வாய்ப்பு என ஆனந்த் சீனிவாசன் தெளிவாக கூறியுள்ளார்.