பைசன் படம் பார்க்க மட்டும் நேரம் இருக்கா? மக்களை மறந்த சினிமா விமர்சகர் முதல்வர் ஸ்டாலின்! விளாசிய இபிஎஸ்!
Seithipunal Tamil October 28, 2025 05:48 AM

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார். மக்களின் பிரச்சனைகளைப் புறக்கணித்து, முதல்வர் முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா நடித்த பைசன் திரைப்படம் வெளியான பின்னர், அந்தப் படத்தை பார்த்த ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் எழுதிய அந்தப் பதிவு, "பைசன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்" எனத் தொடங்கி, இயக்குநரின் கலைநேர்த்தி மற்றும் சமூக நோக்கை பாராட்டும் விதமாக அமைந்திருந்தது.

ஆனால், இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தன் எக்ஸ் தளப் பதிவில் அவர்,"விவசாயிகளின் நெல்லைப் பிடிக்க வேண்டிய முதல்வரின் கை, படக்குழுவினரின் கையைப் பற்றிக் கொண்டிருக்கிறது,"என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:“திரைப்படங்களைப் பார்ப்பதில் குற்றமில்லை. ஆனால், தாங்கள் முதல்வராக ஆனது மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் — சினிமா விமர்சனத்துக்காக அல்ல. மழையால் விவசாயிகள் துயரம் அனுபவிக்க, நெல் முளைத்து நாசமாகி இருக்கிறது. இந்நேரத்தில் விவசாயிகளின் வேதனையை உணராமல், பைசன் படம் பார்க்க நேரம் ஒதுக்குவது எதற்காக?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜெய் பீம் படத்தை பார்த்து "உள்ளம் உலுக்கியது" என்று கூறிய முதல்வர், தன் ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்:“தென் தமிழகம் மழையில் மூழ்கியபோது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி பறந்தவர் தாங்களே. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி படம் பார்த்தவர் தாங்களே. இப்போது மீண்டும் பைசன் படம் பார்த்துக் கொண்டு மக்களின் துயரங்களை மறந்திருக்கிறீர்கள்.”

மழை மற்றும் புயல் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், ஆனால் மக்களை காப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்:“விவசாயிகளின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சி அரசுக்கு, மக்களாட்சி எவ்வளவு வலிமையானது என்பதை விரைவில் உணர்த்தப் போகும் நாள் தொலைவில் இல்லை.”

இந்தக் கடும் விமர்சனத்தால், பைசன் படத்திற்கான ஸ்டாலினின் பாராட்டு பதிவு, தற்போது அரசியல் புயலை கிளப்பி விட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.