சாதாரண மனிதர்களை போல் இல்லாமல் அதிக சக்தி, திறமை, நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு கற்பனையான கதாபாத்திரம்தான் சூப்பர் ஹீரோ. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சக்திமான் தொடரை குறிப்பிடலாம். அந்த தொடருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் மேன் கதையை மையப்படுத்தி வெளியான படங்கள் வருவதற்கு முன்பே சக்திமான் தொடர்தான் மக்களின் பேராதரவை பெற்றிருந்தன.
நாமும் சக்திமான் மாதிரி மாறலாம் என நினைத்து ஒரு சில குழந்தைகள் உயிரையும் மாய்த்திருக்கின்றனர். நாம் ஆபத்தில் இருக்கும் போது உடனே ஒருவர் காப்பாற்ற வருகிறார் என்றால் அதுதான் சூப்பர் ஹீரோ, நாம் நினைத்ததை உடனே நிறைவேற்றுகிறார் என்றால் அது சூப்பர் ஹீரோ என சூப்பர் ஹீரோவுக்குண்டான தகுதிகளாக பார்க்கப்பட்டன. ஆனால் கூடவே சில மேஜிக், கற்பனையான விஷயங்களை சேர்த்து தருவதால் மக்களால் அந்த சூப்பர் ஹீரோக்கள் கொண்டாடப்படுகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோக்களாக நடித்து மக்கள் மனதை யாரெல்லாம் வென்றார்கள் என்பதை பார்க்கப்போகிறோம். சூப்பர் ஹீரோ என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது ‘மின்னல் முரளி’ திரைப்படம்தான். டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அந்தப் படம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. ஒரு அபாரசக்தியுடன் தன் மக்களை காப்பாற்ற நினைக்கும் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் அதாவது சூப்பர் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடித்திருப்பார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹீரோக்களாக வெளியான படங்கள் ஹீரோ மற்றும் மாவீரன் போன்ற திரைப்படங்கள். சூப்பர் ஹீரோக்களை பொறுத்தவரைக்கும் அவர்களின் முக்கிய நோக்கமாக இருப்பது மனிதர்களை காப்பாற்றுவது, தீயவர்களை எதிர்ப்பது. அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களிலும் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஹீரோவாக ஜொலித்திருப்பார்.
அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளியான கந்தசாமி திரைப்படம். மக்களுக்கு எதிரான சுரண்டல், அதிகாரிகளின் அட்டூழியம் என ஒரு அராஜகமே நடக்கும். ஒரு சாதாரண மனிதனாக இதை தட்டிக் கேட்க முடியாது என நினைத்து சாமியாக ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி கந்தசாமியாக ஒரு சூப்பர் ஹீரோவாக ஜொலிப்பார் நடிகர் விக்ரம். இந்த படமும் விக்ரமுக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்த லிஸ்ட்டில் நடிகர் விஜயும் அடங்குவார். வேலாயுதம் படத்தில் வேலாயுதமாகவே ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் விஜய் ஒரு சூப்பர் ஹீரோவாக வருவார். கமெர்ஷியலாக இந்தப் படம் பெரியளவில் ஹிட்டடித்தது. இதே போல் முகமூடி திரைப்படமும் சூப்பர் ஹீரோ படமாக வெளியானது. என்னதான் சூப்பர் ஹீரோக்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உள்ளார்ந்த மனித உணர்வுகளும், பாசமும் அன்பும் இருக்கத்தான் செய்யும்.