கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், தான் வெளியிட்ட ஒரு வீடியோவைத் தவிர வேறு எதையும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இது எதிர்க்கட்சியினர் மத்தியில் “விஜய் ஏன் பேச மறுக்கிறார்? ஏன் பேசுவதில்லை?” என்ற கேள்விகளைத் தொடர்ச்சியாக எழுப்பி வருகிறது. இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே ஒரு ஊடக விவாதத்தில் இது குறித்துப் பேசிய கருத்துகள், த.வெ.க. ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரங்கராஜ் பாண்டே தனது பேச்சில், “விஜய் பேசவில்லை பேசவில்லை எனப் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் பேசவில்லைதான். ஆனால், அவருக்காக இந்த நாடே பேசுகிறது!” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், “விஜய் இன்னும் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. ஆனால், அவர் பெயரை குறிப்பிட்டு, அவரது கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் விஜய் குறித்துப் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குறித்துப் பேசுகிறார். பாரதிய ஜனதா கட்சி விஜய்க்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது. லோக்கல் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறது. விஜய் பேசாவிட்டாலும், இந்த நாடே விஜய்க்காகப் பேசிக் கொண்டிருக்கிறது!” என்று ஆணித்தரமாகப் பேசினார். ரங்கராஜ் பாண்டேவின் இந்தப் பேச்சைப் ‘மாஸாக’ எடிட் செய்து த.வெ.க. தரப்பினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். விஜய் மௌனம் காத்தாலும், அவரைச் சுற்றியே அரசியல் விவாதங்கள் சுழல்வதை இந்தப் பேச்சு உறுதிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.