பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் இதேபோன்ற பணி மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்களுக்காகவும் SIR பணி தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து, 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என அறிவித்தார்.
பீகாரில் முதல்கட்ட பணிகள் எந்தவிதமான புகாரும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாகவும், அங்கு தேர்தல் தயாரிப்பின் துல்லியம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியல் தரம் குறித்த அரசியல் கட்சிகள் எழுப்பிய குறைகளைத் தீர்க்கும் நோக்கில் இந்த SIR பணி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதாக கூறினார்.
இந்த சிறப்பு திருத்தம், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு நடைபெறும் 9வது பெரிய அளவிலான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடவடிக்கை ஆகும். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன், 2002–2004ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இதேபோன்ற திருத்தம் நடைபெற்றது.