கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டு இருந்தார். அதற்காக நேற்று கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனியார் பேருந்துகள் மூலம் தவெக சார்பில் மாமல்லபுரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தவெக தலைவர் விஜய் அனைவரையும் நேரில் சந்தித்து, கண்ணீர் சிந்தி ஆறுதல் கூறியதாக தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் விஐய்யுடன் நடந்த இந்த சந்திப்பில், கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை எழுத்துப்பூர்வமாக வாங்கி, அவற்றை நிறைவேற்றித் தருவதாக தவெக தலைவர் விஜய் உறுதி கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் விஜய்யின் இந்த சந்திப்பு குறித்து, இயக்குநர் சேரன் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். தன்னுடையை எக்ஸ் தள பதிவில், 'நானும் விஜய் கரூர் சென்றிருக்க வேண்டும் என வலியுறுத்தியவன் தான். ஆனால் அனைவரின் கருத்துக்களையும் மீறி, அவர்களை அழைத்து வந்து, அவர்களோடு அமர்ந்து, எந்த இடையூறும் கவனச்சிதறலும் இல்லாமல் துயரத்திற்கு நிம்மதியான ஆறுதலை வார்த்தைகளாகவும் நம்பிக்கையாகவும் கொடுத்திருக்கும் விஜய்யை பாராட்டுகிறேன் என கூறி உள்ளார்.
மேலும், கரூர் சென்றிருந்தால் கூட இவ்வளவு நெருக்கமாக, மனம் விட்டு பேசி அமைதி கண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். நீங்கள் செய்ய நினைத்ததை சரியாக செய்து இருக்கிறீர்கள். இனி இதை இந்த உலகம் உற்று கவனிக்கும். இனி விஜய் உருவாக்கும் குழு என்றும் தவறிவிட்டு விடக்கூடாது.
அதில்தான் உங்கள் அரசியல் வளர்ச்சி உள்ளது. உங்கள் தொண்டர்களை ஒழுங்கு படுத்துங்கள். கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். எல்லாம் இதுவரை உங்களை ரசித்தவர்கள்தான்.. அவர்களை இனி சமூக பாதுகாவலர்களாக மாற்றும் கடமை உங்களுடையது. உங்கள் கையசைவுக்கும் கண்ணசைவுக்கும் அவர்களை கட்டுப்படுத்த தயார் செய்யுங்கள்.
நடந்த இந்த சந்திப்பு நிகழ்வால் அதன் கறைகள் எல்லாம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. அவை எல்லாம் மாறுவது என்பது, தொடர்ந்து உங்கள் கட்சி தொண்டர்கள் நடத்தையில் இருக்கிறது. மக்களுடன் இறங்கி, பழகி இலகுவாகுங்கள். உங்கள் இலக்கு 2026 ஆக அல்லாமல் 2031 ஆக குறிவைத்து களம் ஆடுங்கள், முடியும் என்று வலியுறுத்தி உள்ளார்.