மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான ‘மோன்தா’ புயல், தற்போது தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெற்றுள்ளது. இது தற்போது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ மற்றும் காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

கரையை நோக்கி நகரும் போது, கடுமையான மழை, பலத்த காற்று மற்றும் அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு அதிக கனமழை ஏற்படும் அபாயம் உள்ளது.
ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
புயல் தாக்கத்தின் காரணமாக தெற்கு ரெயில்வே இன்று அறிவித்ததாவது,"
67 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல்–ஹவுரா, சென்ட்ரல்–விசாகப்பட்டினம், விழுப்புரம்–காரக்பூர், திருச்சி–ஹவுரா உள்ளிட்ட 11 ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்–விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட், புவனேஸ்வர்–புதுச்சேரி சூப்பர் பாஸ்ட், புதுச்சேரி–புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாக ரத்து.
பெங்களூரு–ஹாதியா, பெங்களூரு–அகர்தலா, பெங்களூரு–ஹவுரா, வாஸ்கோடகாமா–ஷாலிமர் உள்ளிட்ட பல நீண்ட தூர ரெயில்கள் 12 மணி நேரம் தாமதமாக இயக்கம் செய்யப்படும்.
பெங்களூரு–ஹாதியா எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடா, வாராங்கல், பிலாஸ்பூர் வழியாக மாற்றி இயக்கம் செய்யப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது:
மோன்தா புயல் இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் நிலையில், கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லாதீர்கள். மக்கள் அத்தியாவசியமான பணிகளைத் தவிர வெளியில் செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.