ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள், கடந்த வாரம் இந்தூரில் ஒரு மோசமான சம்பவத்தைச் சந்தித்தனர். கஜ்ரானா சாலைப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு இரண்டு வீராங்கனைகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு நபர், அவர்களில் ஒருவரை முறையற்ற விதத்தில் தொட்டுத் துன்புறுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் உடனடியாகத் தப்பிவிட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் ஆஸ்திரேலிய அணி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து வீராங்கனைகள் உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரியான டேனி சிம்மன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதால், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லீ கார்ட்னரின் மனைவி மோனிகா ரைட், ஒரு டாக்சியில் செல்லும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “கஃபேக்கு கூட போலீஸ் பாதுகாப்புடன் தான் போக வேண்டியிருக்கு” என்று பதிவிட்டு, இந்தியப் பாதுகாப்பைப் பற்றி கருத்துத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியக் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பவங்களின் மத்தியில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் வியாழக்கிழமை அன்று நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளன.