கரூர் சம்பவத்திற்கு பின் தவெகவில் பல அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பலரும் கூடியதில் 41 பேர் வரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அப்போது தவெக தொண்டர்கள் யாரும் அங்கு உதவிக்கு கூட செல்லவில்லை என்கிற புகார் எழுந்தது. ஆனால் போலீசார் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என தவெக நிர்வாகிகள் சொன்னார்கள்.
இந்த சம்பவம் நடந்தவுடனேயே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். சமூகவலைத்தளங்களில் பலரும் இதை நக்கலடித்தனர். எந்நேரமும் அவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவியது. அதனால், நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
ஒருபக்கம், கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் அது ஏற்கப்பட்டதால் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் கரூர் சம்பத்திற்கு பின் புஸ்ஸி ஆனந்தின் அதிகாரத்தை குறைக்க விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அவரிடம் இருந்து பொதுச்செயலாளர் பதவியை பிடுங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம் கரூர் சம்பவத்திற்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டிய அவரே தலைமுறைவானதால் தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்ததாக தலைமையிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து முதன்முறையாக புஸ்ஸி ஆனந்தின் எதிர்ப்பாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் முக்கியத்துவம் கொடுக்கவிருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்த் எதிர்ப்பாளர்கள் 3 பேரை தவெக நிர்வாக குழுவில் நியமைத்திருக்கிறார் விஜய். அவர்கள் மூவருமே விஜயின் தந்தை எஸ்.ஏ.சி யின் ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
தவெகவின் அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்..