நாடு முழுவதும் விரைவில் அரசு ஆதரவு பெற்ற அதிகாரப்பூர்வ ‘காலர் ஐடி’ (Caller ID) முறை அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் இனி வரும் அழைப்புகளில், எண்ணுக்கு பதிலாக அழைப்பாளரின் உண்மை பெயர் நேரடியாக திரையில் காணப்படும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறை (DoT) முன்வைத்த திட்டத்துக்கு TRAI தன்னுடைய ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த புதிய முறைமைக்கு “காலிங் நேம் பிரசென்டேஷன்” (Calling Name Presentation – CNAP) என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அழைப்பாளர் அவருடைய சிம் பதிவு செய்தபோது வழங்கிய பெயரே தொலைபேசி திரையில் தோன்றும்.

இது அரசு ஆதரவு பெற்ற தொலைத் தொடர்பு வலைப்பின்னல் தரவுத்தளத்தின் மூலம் இயங்கும் என்பதால், தகவல்கள் சரிபார்க்கப்பட்டவையாகவும் நம்பத்தகுந்தவையாகவும் இருக்கும். இதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் முயற்சியில் புதிய முன்னேற்றம் ஏற்படும் என TRAI தெரிவித்துள்ளது.
இம்முறைமையை அனைத்து பயனாளர்களுக்கும் இயல்புநிலை (default) முறையில் செயல்படுத்தும் திட்டமுள்ளது. விருப்பமில்லாதவர்கள் தங்கள் தொலைத் தொடர்பு சேவை வழங்குநரிடம் (TSP) தெரிவித்து இதிலிருந்து விலகலாம் எனவும் TRAI விளக்கம் அளித்துள்ளது. இதனால் தனியுரிமையும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் உறுதி செய்யப்படுமென கூறப்படுகிறது.
தற்போது இந்திய தொலைபேசி வலையமைப்புகளில் அழைப்புகள் வரும்போது எண்ணே (Calling Line Identification – CLI) மட்டுமே காணப்படும் நிலையில், CNAP முறை அழைப்பாளரின் பெயரை வெளிப்படுத்தும் புதிய தரத்தை உருவாக்குகிறது. இதற்காக ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் தங்களுக்கான Calling Name (CNAM) தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்க வேண்டும்.

சோதனை ரீதியாக 4ஜி மற்றும் 5ஜி வலைப்பின்னல்களில் இந்த முறைமை ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டது. தொழில்நுட்ப சவால்கள் காரணமாக தற்போதைக்கு தரவு அடிப்படையிலான அழைப்புகளில் மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் முழுமையான செயல்பாட்டிற்கு தேவையான மென்பொருள், வலையமைப்பு மேம்பாடுகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், Truecaller போன்ற தனியார் பயன்பாடுகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டியதில்லை. இந்தியாவில் இதன் மூலம் உலகின் மிகப் பெரிய அரசு ஆதரவு பெற்ற சரிபார்க்கப்பட்ட Caller ID அமைப்பு உருவாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?