இந்தூரிலிருந்து தில்லி நோக்கிச் சென்ற ரயில் ஒன்றில், தனது பணப்பை (பர்ஸ்) திருடு போனதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், ரயிலின் ஏசி கோச்சில் இருந்த கண்ணாடியை உடைக்க முயற்சிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
தில்லி வரை பயணம் செய்தபோது அவரது பர்ஸ் திருடு போயுள்ளது. இதையடுத்து, அவர் ஆர்பிஎஃப் (RPF) மற்றும் ரயில் நிர்வாகத்திடம் உதவி கோரியுள்ளார். ஆனால், எந்த உதவியும் கிடைக்காததால், பதற்றமடைந்த அப்பெண் ஏசி கோச்சில் உள்ள கண்ணாடியை ஒரு தட்டுமுலாம் போன்ற பொருளால் உடைக்கத் தொடங்கியுள்ளார்.
“>
குழந்தையைப் போலச் சத்தம் போட்டுக் கோபத்துடன் கண்ணாடியை உடைக்க முயன்ற அப்பெண், “எனது பர்ஸைக் கொண்டு வாருங்கள், அவ்வளவுதான்” என்று தொடர்ந்து வலியுறுத்தினார். அங்கு இருந்தவர்கள், “உங்கள் பர்ஸை யார் எடுத்தது?” என்று கேட்டபோது, “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்துள்ளார். மேலும், “கண்ணாடியை ஏன் உடைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “எனது பர்ஸ் வேண்டும், அவ்வளவுதான்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, “எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது” என்று கூறி கண்ணாடியைத் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, அப்பெண்ணுடன் ஒரு சிறு குழந்தையும் இருக்கையில் அமர்ந்திருந்தது காணப்படுகிறது. இறுதியில், ரயில்வே நிர்வாகத்தினர் வந்து அப்பெண்ணைச் சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.