Jailer 2: ஜெயிலர் 2-வில் இத்தனை நடிகர்களா?!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!...
CineReporters Tamil November 01, 2025 05:48 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் அசத்தலான வெற்றியை பெற்று 600 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் விநாயக் வில்லனாக நடித்திருந்தார். அனிருத் இசையில் தமன்னா இடுப்பை ஆட்டி ஆட்டி நடனமாடிய ‘காவலா’ பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு முன் வந்த ரஜினியின் சில படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ஜெயிலர் படம் ரஜினிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது, தற்போது ஜெயிலர் 2 படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

முதல் பாகத்தை விட ஜெயிலர் 2-வில் அதிகமான ஆக்சன், மற்றும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு ஏ சர்டிபிகேட் வந்தாலும் பரவாயில்லை. எந்த சமரசமும் செய்ய வேண்டாம் என நெல்சனிடம் ரஜினி சொல்லியதாக செய்திகள் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி சென்னை உட்பட பல இடங்களிலும் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கியிருக்கிறது. இங்குதான் படத்தில் முக்கிய ஆக்சன் காட்சிகளை படம்பிடிக்கவிருக்கிறார் நெல்சன்.

ஜெயிலர் 2 படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிப்பது தெரிய வந்திருக்கிறது. முதல் பாகத்தில் கேமியோ வேடத்தில் நடித்த சிவ்ராஜ் குமார், மோகன்லால் ஆகிய இருவரும் ஜெயிலர் 2-விலும் இருக்கிறார்கள். மேலும், தெலுங்கில் அதிரடி ஆக்சன் மசாலா படங்களில் நடித்து வரும் பாலையாவும் கேமியோ செய்திருக்கிறார் என்கிறார்கள். அதுபோக எஸ்.ஜே சூர்யா இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார்

மலையாளத்தில் பட படங்களில் நடித்தவரும் தமிழில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்தவருமான சூரஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் 2 படத்திலும் நடித்திருக்கிறார்.இதுபோக சந்தானம், பகத் பாசில், தமன்னா, வித்யா பாலன், ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.

இந்த படத்திற்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அந்த படத்திற்கு பின் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.