விவசாய தொழிலாளர்கள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு - ஆய்வில் தெரிய வந்தது என்ன?
BBC Tamil October 30, 2025 02:48 PM
Getty Images

தமிழ்நாட்டில் நேரடியாக விவசாயம் சேர்ந்த வேலைகளில், ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு சிறுநீரக செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, 'த லான்செட்'இதழில் அக்டோபர் 28 அன்று ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வெயில் காரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்ததாக கூறுகிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்.

இவர்களில் 50%க்கும் மேலானவர்களுக்கு இணை நோய்கள் என எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விவசாயி தொழிலாளர்கள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது ஏன்? ஆய்வறிக்கையில் என்ன உள்ளது?

125 கிராமங்கள்...3,350 விவசாயிகள்

தமிழ்நாட்டில் விவசாயி தொழிலாளர்கள் இடையே சிறுநீரக பாதிப்பைக் கண்டறிவதற்கான ஆய்வு ஒன்றை சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை மேற்கொண்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை தலைவராக இருந்த மருத்துவர் கோபாலகிருஷ்ணன் (தற்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர்) தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 125 கிராமங்களைச் சேர்ந்த 3,350 விவசாயிகளின் சிறுநீரக செயல்திறனை இக்குழு ஆய்வு செய்தது.

"தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த பருவநிலை மண்டலங்களை (agro climatic zone) ஏழு வகையாகப் பிரித்துள்ளனர். மழை, ஈரப்பதம், வெப்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவற்றைப் பிரித்துள்ளனர்" எனக் கூறுகிறார், மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

இதனை ஐந்து மண்டலங்களாக சுருக்கி ஒவ்வொரு மண்டத்திலும் 25 கிராமங்களில் தொழிலாளர்கள் இடையே ஆய்வு நடத்தப்பட்டதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "ஒவ்வொரு கிராமத்திலும் ரேண்டமாக 30 வீடுகளைக் கணக்கில் எடுத்தோம். ஒரு வீட்டில் இருந்து ஒரு வேளாண் தொழிலாளியை தேர்வு செய்தோம்" என்கிறார்.

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையை (multi stage randomized cluster sampling technique) இந்த ஆய்வில் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது தொழிலாளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவை டிஜிட்டல் முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. அதனை மருத்துவர் கோபாலகிருஷ்ணன் பட்டியலிட்டார். அவை

* 18 வயதுக்கு மேற்பட்டவரா?

*குறைந்தபட்சம் ஒரு வருடம் விவசாய தொழிலாளியாக இருந்துள்ளாரா?

* புகைப்பழக்கம் உள்ளதா?

* நேரடியாக புகையிலையை பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா? (பீடி, சிகரெட் தவிர குட்கா போன்றவை)

* எவ்வளவு நாட்களாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

* நாளொன்றுக்கு எவ்வளவு மணிநேரம் வயலில் இருப்பீர்கள்?

"இதுபோன்று ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை பூர்த்தி செய்யவே 20 நிமிடங்கள் தேவைப்படும்" எனக் கூறிய மருத்துவர் கோபாலகிருஷ்ணன், "அடுத்து உயரம், எடை, ரத்த அழுத்தம், சிறுநீர் மாதிரி, ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன" என்கிறார்.

இப்பணிக்காக மாநிலம் முழுவதும் உள்ள பொது சுகாதாரத்துறை ஊழியர்களை ஆய்வுக் குழு பயன்படுத்தியுள்ளது.

Getty Images '17.4 சதவீதம் பேருக்கு பாதிப்பு'

"ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் வைத்தே சிறுநீரில் புரதம் உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு ரத்த மாதிரிகள் பெறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன" என்கிறார், மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

அங்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன. இரண்டாவது மாதிரியை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவப் பணிகள் சேவை மையத்தில் உள்ள ஆய்வகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

"ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு என்பது மிக முக்கியமானது. அதை அடிப்படையாக வைத்து சிறுநீரகம் செயல்படுவதைக் கணக்கிடலாம். ஆய்வுகளில் மாறுபாடு வரலாம் என்பதால் அனைத்து ரத்த மாதிரிகளையும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சென்னைக்கு கொண்டு வந்தோம்" என்கிறார், மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

"இரண்டாவது சோதனையில் சிறுநீரக செயல்பாடு நிமிடத்துக்கு எவ்வளவு எம்.எல் (ml) என்பது தெரியவரும். அது அறுபதுக்குக் கீழ் இருந்தால் சிறுநீரகம் பிரச்னையில் உள்ளதாக முதற்கட்டமாக முடிவு செய்தோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவக் குழுவின் ஆய்வில் 3,350 விவசாயிகளில் 17.4 சதவீத மக்களுக்கு சிறுநீரக செயல்பாட்டில் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic kidney disease) இருப்பது தெரியவந்துள்ளது.

Dr Gopalakrishnan சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் சிறுநீரகவியல் துறை தலைவரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன் (தற்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர்) ஆச்சரியம் அளித்த இரண்டாவது ஆய்வு

"இதை ஒரே ஒரு சோதனையை வைத்து முடிவுக்கு வரக் கூடாது என நினைத்தோம். சிறுநீரக செயல்பாட்டில் குறைந்தது மூன்று மாதங்களாவது பிரச்னை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்காலிக பிரச்னையாக இருக்கலாம் எனவும் முடிவு செய்தோம்" எனக் கூறுகிறார் கோபாலகிருஷ்ணன்.

இதையடுத்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறிந்த 17.4 சதவீதம் பேரிடம் மீண்டும் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

இதைப் பற்றி விவரித்த மருத்துவர் கோபாலகிருஷ்ணன், " இதற்கு 2 சதவீதம் பேர் ஒத்துழைப்பு தரவில்லை. மற்றவர்களில் 5.4 சதவீதம் பேருக்கு மட்டுமே நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு இருப்பது தெரியவந்தது. 12 சதவீதம் பேருக்கு தற்காலிக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தோம்" என்கிறார்.

'வெயிலின் தாக்கமே காரணம்'

"தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் உள்ள வெப்பநிலை என்பது வேறு, டிசம்பர் மாத காலநிலை என்பது வேறு. அதனை செயற்கைக் கோள் படங்கள் மூலம் உறுதி செய்தோம். ஆகஸ்ட் மாதத்தில் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருந்தது" எனவும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதன் காரணமாக 12 சதவீதம் பேருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதுவே டிசம்பர் மாதம் அவர்களின் சிறுநீரகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

பாதிப்பு கண்டறியப்பட்ட வேளாண் தொழிலாளிகள், வாரத்துக்கு 26 மணிநேரத்துக்கு அதிகமாக வெயிலில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

" பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை குறைபாடு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருந்துள்ளன. மற்றவர்களுக்கு (2.7 சதவீதம்) இதுபோன்ற பாதிப்புகள் இல்லை. இவர்களில் யாருக்கும் சிறுநீர் நுரைத்துப் போனதோ, கால் வீக்கமோ இல்லை. இதை காரணம் தெரியாத சிறுநீரக செயலிழப்பு (chronic kidney disease - unknown) என்கிறோம்" எனக் கூறுகிறார், மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

வெப்பத்தின் தாக்கம் (Heat stress), சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதற்கு வெவ்வேறு மாதங்களில் எடுத்த நிலவிய காலநிலை தொடர்பான தரவுகள் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எந்தெந்த மாவட்டங்களில் அதிகம்?

விழுப்புரம், கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகளவில் இருந்துள்ளதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. "தனக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை இன்றளவும் தெரிந்து கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வரும் 70 வயதான விவசாயி தனசேகரன்.

இவருக்கு 2022 ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. "பாதிப்பு வருவதற்கு முன்பு நாள் முழுக்க கடுமையான வெயிலில் வேலை பார்ப்பேன். வெயில் மழையெல்லாம் பார்த்தது இல்லை. சிறுநீரகம் பாதிப்படைவதற்கு முன்பு சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் போன்றவை இருந்தது இல்லை" என்கிறார்.

"கடந்த சில ஆண்டுகளாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை" எனக் கூறும் தனசேகரன், "தற்போது டயாலிஸிஸ் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருந்து, மாத்திரைகளே போதும் என மருத்துவர்களிடம் கூறிவிட்டேன். மாதத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் மருந்துக்கு செலவாகிறது" என்கிறார்.

Dhanasekaran தனசேகரன், விவசாயி களைக்கொல்லிகளால் பாதிப்பு ஏற்படுமா?

அதேநேரம், "களைக்கொல்லிகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை மருத்துவர்கள் ஆராய வேண்டும்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆள் பற்றாக்குறை காரணமாக களைக்கொல்லியை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மண்வளம் பாதிக்கிறது. விவசாயிகளின் சிறுநீரக செயலிழப்புக்கும் இதனால் பாதிப்பு வருவதாக அறிகிறோம்" எனக் கூறினார்.

"ஆனால், இதன்மூலமாக பாதிப்பு ஏற்படுவதாக திட்டவட்டமாக கூற முடியாது" எனக் கூறுகிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இணைப் பேராசிரியர் சக்திராஜன். வெயிலின் தாக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆய்வில் இவர் பங்கு வகித்துள்ளார்.

"பலவிதமான ரசாயன மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதா என்பதை ஆய்வுகளை வைத்து மட்டுமே அறிய முடியும்" என அவர் தெரிவித்தார்.

'டெல்டாவில் பாதிப்பு குறைவு'

"சில வகையான பூச்சிக்கொல்லிகளால் சிறுநீரகங்கள் பாதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகமான சிறுநீரக செயலிழப்பு கண்டறியப்பட்டால் அங்குள்ள நீர்நிலைகளை ஆராய வேண்டும். துத்தநாகம், காட்மியம் மற்றும் பாதரசம், ஆர்சனிக் ஆகியவை அதிகம் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்" எனவும் மருத்துவர் சக்திராஜன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பகுதிகளிலும் தெற்குப் பகுதிகளிலும் ஆகஸ்ட் மாதம் வெப்பம் அதிகமாக இருந்துள்ளது. அதேநேரம், மேற்குப் பகுதிகளில் வெப்பம் குறைவாக இருந்தாலும் கோவை, திருப்பூரில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார்.

"இதற்கான காரணங்களை ஆராய வேண்டும்" எனக் கூறும் மருத்துவர் சக்திராஜன், " டெல்டா மற்றும் வடமேற்குப் பகுதிகளிலும் பாதிப்பு குறைவாக இருந்தது. அங்கு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்துள்ளது" என்கிறார்.

Dr.Sakthirajan சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இணைப் பேராசிரியர் சக்திராஜன். கர்நாடகாவிலும் பாதிப்பு

கர்நாடகாவிலும் விவசாயிகள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு அதிகளவில் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாகக் கூறுகிறார், மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

கர்நாடகாவில் உள்ள உதானம் பகுதியில் முந்திரிக்காடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் 2018 ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்புக்கு ஏராளமானோர் ஆளாகியுள்ளனர். அங்குள்ள உதானம் பகுதியில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டதாக நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்காத்துக் கொள்வதற்கான வழிகள் என்ன?

வெயிலின் தாக்கத்தில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான தீர்வையும் ஆய்வுக்குழு முன்வைக்கிறது.

* வாரத்துக்கு 24 மணிநேரத்துக்குமேல் தொடர்ந்து வெயிலில் வேலை பார்த்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

* 2 மணிநேரத்துக்கு ஒருமுறை மர நிழலுக்கு வந்துவிட வேண்டும்.

* வேலைக்கு நடுவில் 1 மணிநேரத்துக்கு 750 மில்லி தண்ணீரை அருந்த வேண்டும்.

* அந்த தண்ணீர் 10 முதல் 15 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்க வேண்டும். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் இருக்கக் கூடாது.

* ஊராட்சி அளவில் 10 முதல் 15 சென்டிகிரேடு வெப்பநிலையில் குடிநீரை கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

* புகையிலையை பயன்படுத்தக் கூடாது

*குளிர்பானங்களை குடிக்கக் கூடாது.

* இளநீரும் மோரும் அதிகளவில் அருந்த வேண்டும்.

* சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்; புரத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

* வெயிலில் அதிக நேரம் வேலைபார்ப்பதால் ஏதேனும் உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆய்வாக இது உள்ளதாகக் கூறும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன், "இதற்காக 20 லட்ச ரூபாய் நிதியை தமிழ்நாடு சுகாதார இயக்கம் ஒதுக்கியது" எனக் கூறுகிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் முன்னாள் தலைவரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.